Sunday, March 7, 2010

கன்னியாகுமரி

* 1.குமரியை கலக்கிய பைக் திருடன் சிக்கினான் 11 பைக்குகள், உதிரிபாகங்கள் பறிமுதல் : தனிப்படை போலீசார் சாதனை

மார்த்தாண்டம் : கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பைக் திருடியவர் போலீசாரிடம் சிக்கினார். அவரிடம் இருந்து 11 பைக்குகள் மற்றும் 9 பைக்குகளின் உதிரிபாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம், குழித்துறை, நாகர்கோவில், தக்கலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து பைக் திருட்டுகள் நடந்து வந்தது. இது தொடர்பாக பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பைக் திருட்டு கும்பல் பைக்கை பிரித்து உதிரிபாகங்களாக மாற்றி வேறு பைக்கில் பொருத்தி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி., ராஜேந்திரன் உத்தரவின் பேரில் மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டர் ராஜசேகர், தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் சபாபதி, ஏட்டுகள் முருகன், கனகராஜ், ராஜேந்திரன், அலெக்ஸ் உட்பட ஆறு பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் விசாரணை நடந்தி வந்தனர்.
இந்நிலையில் ஒரு பைக் திருட்டு தொடர்பாக திருவனந்தபுரம் மாவட்டம் மலையின்கிழ் பகுதியை சேர்ந்த ஸ்ரீகுமார் மகன் ஸ்ரீஜித்(20) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவரிடம் விசாரித்ததில் திருவட்டார் பகுதியை சேர்ந்த பைக் திருடனுடன் சேர்ந்து பைக் திருடியது தெரியவந்தது. தொடர்ந்து ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்தனர். பின் தனிப்படை போலீசார் திருவட்டார் பகுதியில் தொடர்ந்து கண்காணித்து பைக் திருடனை பிடித்தனர். தொடர்ந்து நடந்த விசாரணையில் 11 பைக்குகள் மற்றும் 9 பைக்குகளின் உதிரிபாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் பைக்குகளை திருடி உதிரிபாகங்களாக வேறு வாகனங்களில் பொருத்தி விற்பனை செய்ததும் தெரியவந்தது. போலி ஆர்.சி., புக் தயாரித்து கொடுக்கப்பட்டுள்ளதும், பைக் கடன் கேட்பவர்களுக்கு தனது சொந்த பைனான்சில் இருந்து கடன் கொடுத்ததும் தெரியவந்துள்ளது. தனிப்படை போலீசார் ரகசியமாக விசாரித்து வருகின்றனர். மேலும் பல பைக்குகள் பறிமுதல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Top
* 2.மண்டைக்காடு அம்மன் கோயில் ஒடுக்குபூஜை நேரடி ஒளிபரப்பு: திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு

குளச்சல் : மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் பிரசித்தி பெற்ற ஒடுக்கு பூஜை முதன்முதலாக திருமலை திருப்பதி தேவஸ்தான சேட்டிலைட் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் கொடை விழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. இங்கு கேரளாவில் இருந்து அதிக அளவு பெண்கள் இருமுடி கட்டி வந்து பொங்கலிட்டு அம்மனை வணங்கி செல்கின்றனர். மண்டைக்காடு கோயிலில் நடக்கும் ஒடுக்குபூஜை பிரசித்தி பெற்றதாகும். இதை காண கேரளம் மற்றும் மாவட்டத்தின் பல பகுதியில் இருந்து அதிக அளவு பக்தர்கள் வருகின்றனர். இந்த பூஜையை முதன்முதலாக திருமலை திருப்பதி தேவஸ்தான சேட்டிலைட் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
இந்த சேனல் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருக்கல்யாணம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயில் சூரசம்காரம், நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் விழா, திருவண்ணாமலை கார்த்திகை தீபம் போன்ற பிரசித்திபெற்ற கோயில் நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்துள்ளது. சமீபத்தில் கன்னியாகுமரியில் நடந்த திருப்பதி ஸ்ரீனிவாச திருக்கல்யாண நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.
அந்த வரிசையில் தற்போது மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் ஒடுக்குபூஜை, பெரியசக்கர தீவட்டி, அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி மற்றும் பக்தர்களின் பேட்டியை நேரடி ஒளிபரப்பு செய்கிறது. இதனால் உலகிலுள்ள அம்மன் பக்தர்கள் ஒடுக்குபூஜையை பார்க்க வசதி ஏற்பட்டுள்ளது.
கோயில் நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய நேரடி ஒளிபரப்பு வாகனம், 6 நவீன கேமராக்கள் உட்பட 22 பேர் கொண்ட குழு தலைமை செய்தி ஆசிரியர் ஸ்ரீ தலைமையில் எக்சிகியுட்டிவ் அதிகாரி கிருஷ்ணராவ் மற்றும் சேர்மன் ஆதிகேசவன் அறிவுரையின் பேரில் மண்டைக்காடு வந்துள்ளது.
இன்று(8ம் தேதி) இரவு 10 மணி முதல் 12 மணி வரை பெரியசக்கர தீவட்டி மற்றும் அம்மன் பவனியை நேரடி ஒளிரப்பு செய்கிறது. நாளை(9ம் தேதி) இரவு 10 மணி முதல் 1 மணி வரை ஒடுக்குபூஜை, பக்தர்களின் பேட்டி, கோயிலின் சிறப்பு அம்சங்கள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தேவசம்போர்ட் மராமத்து இன்ஜினியர் ஐயப்பன், அறங்காவலர்குழு தலைவர் ஸ்ரீதர், உறுப்பினர் அர்ஜூனன், கோயில் மேலாளர் ஆறுமுகதரன், வக்கீல் விஜயகுமார் ஆகியோர் இணைந்து செய்துள்ளனர்.
Top
* 3.சுற்றுலா வந்த கார் கடத்தல் டிரைவர் உட்பட நால்வர் கைது

கன்னியாகுமரி : கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த காரை கடத்தி சென்ற டிரைவர் உட்பட 4பேரை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை தச்சமொழியை சேர்ந்தவர் சிவபெருமாள். இவருக்கு சொந்தமான டாடா சுமோ காரை சாத்தான்குளம் விஜயபுரம் பகுதியை சேர்ந்த கார்த்திக் (23) என்பவர் ஓட்டி வந்தார். கடந்த 2ம் தேதி டிப் டாப் ஆசாமிகள் இருவர் காரை கன்னியாகுமரிக்கு வாடகைக்கு அழைத்து வந்தனர். அப்போது காரை வாடகைக்கு அழைத்து வந்தவர்கள் கடத்தி சென்று விட்டதாக கார்த்திக் கன்னியாகுமரி போலீசில் புகார் கூறினார். புகாரின் பேரில் கன்னியாகுமரி போலீசார் வழக்குபதிவு செய்து காரை கடத்தியவர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை கன்னியாகுமரி போலீசார் இன்ஸ்பெக்டர் பால்துரை, எஸ்.ஐ., முத்துராஜ் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது விவேகானந்தபுரம் ஜங்ஷனில் சந்தேகப்படும்படியாக 3பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கடந்த 2ம் தேதி காணமல் போன காரை டிரைவர் கார்த்திக்குடன் சேர்ந்து திருடியது தெரியவந்தது. இதையடுத்து சாத்தான்குளம் சுமித்லால் ஜாண்சிங் (35), அதேபகுதி ஜாண்ராஜா (24), சேரன்மகாதேவி டேனியல்பிரகாஷ் (24), டிரைவர் கார்த்திக் ஆகியோரை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக சேரன்மகாதேவி செய்யது அலி என்பவரை தேடி வருகின்றனர்.
Top

பொது

* 1.மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் நாளை ஒடுக்கு பூஜை

குளச்சல் : மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் நாளை ஒடுக்கு பூஜை நடக்கிறது. கொடைவிழாவை முன்னிட்டு தினமும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தவண்ணம் உள்ளது. நேற்று இரண்டு கிலோ மீட்டர் தூரம் கியூவில் நின்று பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். வரலாற்று சிறப்பு மிக்க புண்ணியஸ்தலமான மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடைவிழா கடந்த 28 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்துவருகிறது. ஆற்றுகால் பொங்காலை, திருச்செந்தூர் மாசி கொடைவிழா, சிவராத்திரிவிழா, அய்யாவைகுண்டசாமி அவதார தினவிழா, உள்ளிட்ட முக்கிய கோயில் விழாக்கள் நிறைவடைந்து விட்டதால் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடை விழாவிற்கு வரும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறைநாள் என்பதால் மண்டைக்காட்டில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவு காணப்பட்டது. குளச்சல், திங்கள் சந்தை, மணவாளக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் வந்து செல்லும் வாகனங்களால் நீண்டவரிசையில் வாகன போக்குவரத்து காணப்பட்டது. மண்டைக்காடு பஸ்ஸ்டாண்ட் லெட்சுமிபுரம் மண்டைக்காடு ரோடு, உள்ளிட்ட இடங்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பக்தர்கள் கால்நனைக்கும் இடத்தை கயிறுகட்டப்பட்டு பாதுகாப்பிற்காக தீயணைப்பு சிறப்பு கமாண்டோ படையினர் நிறுத்தப்பட்டிருந்தனர். பகவதி அம்மனை தரிசிப்பதற்காக கோயிலின் உட்புறமும் கோயிலை சுற்றி உள்ள வீதிகள், கோயிலின் பின்புறம் உள்ள தோப்பு பகுதி என சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட கியூவரிசையில் காத்திருந்தனர். ஒன்பதாம் நாள் விழாவான இன்று (மார்ச்-8) இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிபல்லக்கில் பவனி வருவதால், பெரிய சக்கரதீவட்டி ஊர் வலம் மற்றும் அலங்கார பவனி நடக்கிறது. 10-ம் நாள் கொடை விழாவான நாளை நள்ளிரவு 12. மணிக்கு இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்யும் சிறப்பு மிக்க ஒடுக்கு பூஜை நடக்கிறது. அதற்கு முன்பு ஒடுக்குபூஜை பவனி நடக்கிறது. ஒடுக்குபூஜை தீபாராதனைக்கு பின்பு பக்தர்களுக்கு ஒடுக்கு பூஜை பிரசாதம் வழங்கப்படுகிறது.
Top

சம்பவம்

* 1.குலசேகரம் அருகே தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

குலசேகரம் : குலசேகரம், அரசமூடு அருகே வீட்டில் தீபிடித்து சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளது.
குலசேகரம், அரசமூடு கோயில்விளையை சேர்ந்தவர் சேக்முகம்மது(38). இவர் மர வியாபாரம் செய்து வருகிறார். இவரது தம்பி சுதீர்(35), அம்மா சபீனா(70) ஆகியோர் குடும்பத்துடன் வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று சபீனா வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அப்போது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த இன்வெட்டரில் மின் கசிவு ஏற்பட்டு தீ பிடித்துள்ளது. இதை பார்த்த பக்கத்து வீட்டார் சப்தம் போட்டுள்ளனர். அவர்கள் வந்து தீயை அணைக்க முயன்றனர். பின் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தக்கலை தீயணைப்பு அலுவலர் முத்துநாடார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். இதில் வீட்டில் இருந்த நகை, பணம், இரண்டு பைக் என சுமார் 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளது. இது குறித்து குலசேகரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Top
* 2.மண்டைக்காட்டில் மரம் விழுந்து மின்கம்பி துண்டிப்பு

குளச்சல் : மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் அருகில் நின்ற தென்னை மரம் டிரான்ஸ்பார்மர் அருகில் மின்கம்பியில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் கொடை விழா நடந்து வருகிறது. கோயிலின் முன்னால் செல்லும் வழியில் தேவசம்போர்டுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தில் தென்னை மரங்கள் உள்ளது. இந்நிலையில் நேற்று ஒரு தென்னை மரம் சரிந்து அருகிலுள்ள மின் கம்பி மீது விழுந்தது. இதன் அருகில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. மரம் சரிந்து விழுந்த சப்தம் கேட்டு கோயிலில் சாமி தரிசனத்திற்கு வந்த கேரள மாநிலம் வர்க்கலையை சேர்ந்த லிசி(28) என்பவர் மயக்கமடைந்து வழுந்தார்.
இவரை தீயணைப்பு படை வீரர்களின் வாகனத்தில் ஆசாரிபள்ளம் அரசு மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின் தீயணைப்புப்படை வீரர்கள் கோட்ட அதிகாரி செல்வராஜ் தலைமையில் மரத்தை அப்புறப்படுத்தினர். மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பியை சீரமைத்தனர். சம்பவ இடத்தை மாவட்ட எஸ்.பி., ராஜேந்திரன் நேரில் பார்வையிட்டார். துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு படை வீரர்களுக்கு பரிசு வழங்கினார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment